search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இத்தாலி ஓபன் டென்னிஸ்"

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடாலும், பெண்கள் பிரிவில் கரோலினா பிளிஸ்கோவா சாம்பியன் பட்டம் பெற்றனர்.
    ரோம்:

    பிரெஞ்ச் ஓபனுக்கு முன்னோட்டமாக இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்தது. களிமண் தரை போட்டியான இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), 2-ம் நிலை வீரர் ரபெல் நடாலும் (ஸ்பெயின்) பலப்பரீட்சை நடத்தினர். விறுவிறுப்பான இந்த மோதலில் நடால் 6-0, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி 9-வது முறையாக இந்த பட்டத்தை வசப்படுத்தினார். இந்த ஆட்டம் 2 மணி 25 நிமிடங்கள் நீடித்தது. ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய மாஸ்டர்ஸ் பட்டத்தை நடால் வெல்வது இது 34-வது முறையாகும். வெற்றி பெற்ற நடாலுக்கு ரூ.7½ கோடியும், 2-வது இடம் பிடித்த ஜோகோவிச்சுக்கு ரூ.3¾ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.



    பெண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜோஹன்னா கோன்டாவை (இங்கிலாந்து) தோற்கடித்து வாகை சூடினார். 1978-ம் ஆண்டுக்கு பிறகு செக்குடியரசு வீராங்கனை ஒருவர் இந்த பட்டத்தை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும். மொத்தத்தில் பிளிஸ்கோவா கைப்பற்றிய 13-வது சர்வதேச பட்டமாக இது அமைந்தது.
    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால், சிட்சிபாஸ்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதியில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ்சை (கிரீஸ்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இந்த ஆண்டில் களிமண் தரை போட்டியில் ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும். பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 42-ம் நிலை வீராங்கனையான ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து) 5-7, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள கிகி பெர்டென்சை (நெதர்லாந்து) சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் காயம் காரணமாக காலிறுதி ஆட்டத்தில் இருந்து ரோஜர் பெடரர், நவோமி ஒசாகா ஆகியோர் விலகினார்கள்.
    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 2-6, 6-4, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் குரோஷியாவில் போர்னா கோரிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    காலிறுதி ஆட்டத்தில் ரோஜர் பெடரர், கிரீஸ் வீரர் சிட்சிபாஸ்சை சந்திக்க இருந்தார். இந்த நிலையில் வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பெடரர் போட்டியில் இருந்து விலகினார். இது குறித்து 37 வயதான ரோஜர் பெடரர் கருத்து தெரிவிக்கையில், ‘காலிறுதி ஆட்டத்தில் விளையாட முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. நான் 100 சதவீத உடல் தகுதியுடன் இல்லாததால் எனது அணியினருடன் கலந்து ஆலோசித்து விலகல் முடிவை மேற்கொண்டேன். அடுத்த ஆண்டு இந்த போட்டிக்கு திரும்புவேன் என்று நம்புகிறேன்’ என்றார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-4, 6-0 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீரர் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் ரபெல் நடால்-சிட்சிபாஸ் மோதுகிறார்கள்.

    இன்னொரு காலிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீரர் நிஷிகோரி 4-6, 2-6 என்ற நேர்செட்டில் 24-ம் நிலை வீரரான டிகோ ஸ்வார்ட்ஸ்மனிடம் (அர்ஜென்டினா) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்), 4-ம் நிலை வீராங்கனையான நெதர்லாந்தின் கிகி பெர்டென்சை சந்திக்க இருந்தார். ஆனால் வலது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நவோமி ஒசாகா கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார். இதனால் கிகி பெர்டென்ஸ் போட்டியின்றி அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 6-7 (5-7), 6-2, 6-2 என்ற செட் கணக்கில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஸரென்காவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்ததுடன் 500-வது வெற்றியையும் ருசித்தார்.
    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால், பெடரர் 3வது சுற்றுக்கு முன்னேறினர்.
    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-0, 6-1 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் ஜெர்மை சார்டியை எளிதில் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-4, 6-3 என்ற நேர்செட்டில் 72-ம் நிலை வீரரான ஜோவ் சோய்சாவை (போர்ச்சுகல்) வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-3 என்ற நேர்செட்டில் கனடா வீரர் டெனிஸ் ஷபோவாலோவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6-3, 6-3 என்ற நேர்செட்டில் சுலோவக்கியா வீராங்கனை சிபுல்கோவாவை சாய்த்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து வீராங்கனை ஜோஹன்னா கோன்டா 6-7 (3-7), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனை வான்ட்ரோசோவா 2-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் சிமோனா ஹாலெப்க்கு (ருமேனியா) அதிர்ச்சி அளித்து 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா 6-0, 6-1 என்ற நேர்செட்டில் கஜகஸ்தான் வீராங்கனை புதின் சேவாவை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் விக்டோரியா அஸரென்கா 4-6, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் எலினா ஸ்விடோலினாவுக்கு அதிர்ச்சி அளித்ததுடன் அவரது ‘ஹாட்ரிக்’ பட்ட கனவையும் தகர்த்தார்.
    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனான எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), வைல்டு கார்டு மூலம் வாய்ப்பு பெற்ற 51-ம் நிலை வீராங்கனையான விக்டோரியா அஸரென்காவை (பெலாரஸ்) எதிர்கொண்டார். மழையால் தடைப்பட்டு நடந்த இந்த ஆட்டம் 2 மணி 14 நிமிடம் நீடித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் விக்டோரியா அஸரென்கா 4-6, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் எலினா ஸ்விடோலினாவுக்கு அதிர்ச்சி அளித்ததுடன் அவரது ‘ஹாட்ரிக்’ பட்ட கனவையும் தகர்த்தார்.

    வெற்றிக்கு பிறகு அஸரென்கா அளித்த பேட்டியில், ‘இந்த ஆட்டம் வியக்கத்தக்க வகையில் இருந்தது. மழையால் ஆட்டம் பல முறை தடைப்பட்டு நடந்தது. ஒட்டுமொத்தத்தில் இது உயர்தரமான போட்டியாக இருந்தது. என்னுடைய செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டி தொடரில் இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்’ என்று தெரிவித்தார். இதேபோல் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவும் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஸ்வேரேவ்வை வீழ்த்தி நடால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். #ItalyOpen #RafaelNadal #AlexanderZverev

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகள் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று இறுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால் (ஸ்பெயின்), உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவை எதிர்த்து விளையாடினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-1 என நடால் கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டை 6-1 என ஸ்வரேவ் கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது.



    சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதி செட்டை 6-3 என நடால் கைப்பற்றினார். இறுதியில் 6-1, 1-6, 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற ரபேல் நடால் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), ஷிமோனா ஹாலெப்பை 6-0, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். #ItalyOpen #RafaelNadal #AlexanderZverev
    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் நடால், ஸ்வேரேவ் ஆகியோர் பலப்பரீட்சை செய்கின்றனர். #ItalyOpen #RafaelNadal #AlexanderZverev

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகள் ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. 

    நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால் (ஸ்பெயின்), முன்னாள் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) எதிர்கொண்டார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரபெல் நடால் 7-6 (7-4), 6-3 என்ற நேர் செட்டில் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி போட்டியில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவ், பெல்ஜியத்தின் டேவிட் கோஃபினை எதிர்த்து விளையாடினார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் கோபினை வீழ்த்திய ஸ்வேரேவ் இறுதி போட்டிக்குள் நுழைந்தார்.



    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-4, 6-3 என்ற நேர்செட்டில் அனெட் கோன்டாவீட்டை (எஸ்தோனியா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் மரியா ஷரபோவா (ரஷியா), ஷிமோனா ஹாலெப் ஆகியோர் பலப்பரீட்சை செய்தனர். இதில் 4-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஹாலெப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். 

    இன்று இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. #ItalyOpen #RafaelNadal #AlexanderZverev
    இத்தாலி ஓபன் டென்னிசில் ரபெல் நடால், சிமோனா ஹாலெப் கால்இறுதிக்கு முன்னேறினர். #RafaelNadal #SimonaHalep
    ரோம்:

    இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அனெட் கோன்டாவீட் (எஸ்தோனியா) 6-2, 7-6 (3) என்ற நேர் செட் கணக்கில் வீனஸ் வில்லியம்சுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்கு முன்னேறினார். பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஜெலினா அஸ்டாபென்கோ (லாத்வியா) தன்னை எதிர்த்த ஜோஹன்னா கோன்டாவை (இங்கிலாந்து) 2-6, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெளியேற்றினார். தோல்வியை தழுவிய கோன்டாவுக்கு நேற்று பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.



    சிமோனா ஹாலெப்புடன் (ருமேனியா) மோத இருந்த அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் விலா பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகினார். இதனால் ஹாலெப் விளையாடாமலேயே கால்இறுதியை எட்டியதுடன், தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் தக்கவைத்துக் கொண்டார். ஸ்விடோலினா (உக்ரைன்), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.

    ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் 6-4, 6-1 என்ற நேர் செட்டில் டெனிஸ் ஷபோவலோவை (கனடா) விரட்டி கால்இறுதிக்குள் நுழைந்தார். மரின் சிலிச் (குரோஷியா), காரெனோ பஸ்தா (ஸ்பெயின்), போக்னினி (இத்தாலி), டேவிட் கோபின்(பெல்ஜியம்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

    இரட்டையர் 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாசெலின் ஜோடி 6-7 (5), 4-6 என்ற நேர் செட்டில் பாப்லோ கியூவாஸ் (உருகுவே)- மார்செல் கிரானோலர்ஸ் (ஸ்பெயின்) இணையிடம் தோற்று நடையை கட்டியது.  #RafaelNadal #SimonaHalep
    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் ஆகியோர் தங்களது 2-வது சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். #RafaelNadal #SimonaHalep
    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-1, 6-2 என்ற நேர்செட்டில் குரோஷியாவின் பெட்ரா மார்டிச்சை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் லாத்வியா வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ 6-2, 7-5 என்ற நேர்செட்டில் சீனாவின் சாங் ஷூய்யை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.



    இன்னொரு ஆட்டத்தில் உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-1, 6-0 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீராங்கனை நோமி ஒசாகாவை தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 6-3, 3-6, 5-7 என்ற செட் கணக்கில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) ஆகியோரும் 2-வது சுற்று தடையை வெற்றிகரமாக கடந்தனர். முன்னதாக முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ரஷியாவின் ஷரபோவா 7-5, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லிக் பார்டியை போராடி வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2½ மணி நேரம் நீடித்தது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் 5-7, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் மார்கோ செஷினாடோவை தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவரும், 7 முறை சாம்பியனுமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-1, 6-0 என்ற நேர்செட்டில் டாமிர் ஜூம்கர்ரை (போஸ்னியா) ஊதித்தள்ளினார்.

    இதே போல் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா) தன்னை எதிர்த்த பாசிலாஷ்விலியை (ஜார்ஜியா) 6-4, 6-2 என்ற நேர் செட்டில் வெளியேற்றினார். நிஷிகோரி (ஜப்பான்), மரின் சிலிச் (குரோஷியா), ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ (அர்ஜென்டினா) உள்ளிட்டோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர். 
    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடந்த முதல் சுற்றில் செர்பிய வீரர் டுகோவிச் மற்றும் ஜப்பான் வீரர் நிஷிகோரி ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர். #ItalianOpen #NovacDjokovic #KeiNishikori
    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் நேற்று முதல் தொடங்கியது. இந்த தொடர் வரும் 20-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நேற்று தொடங்கியது. இதில் செர்பிய வீரர் நோவாக் டுகோவிச் மற்றும் உக்ரேனிய வீரர் அலெக்சாண்டர் டோகோபோலோவ் ஆகியோர் மோதினர்.

    முதலில் இருந்தே டுகோவிச் சிறப்பாக விளையாடினார். இதனால் 6-1 என்ற கணக்கில் எளிதில் முதல் சுற்றை கைப்பற்றினார். இதேபோல் இரண்டாவது பொறுப்பாக விளையாடியதால் 6-3 என்ற கணக்கில் இரண்டாவது சுற்றிலும் வென்றார்.

    இறுதியில், டுகோவிச் 6-1 6-3 என்ற கணக்கில் டோகோபோலோவை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், மற்றொரு போட்டியில் ஜப்பான் வீரர் நிஷிகோரியும், ஸ்பெயின் வீரர் பெலிசியானோ லோபசும் மோதினர். இந்த போட்டியில் நிஷிகோரி போராடி 7-6, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
    #ItalianOpen #NovacDjokovic #KeiNishikori
    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 23 முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்றவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் விலகி இருக்கிறார். #Italian Open #SerenaWilliams
    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் வருகிற 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 23 முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்றவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் விலகி இருக்கிறார். இந்த தகவலை போட்டி அமைப்பு குழுவினர் டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளனர்.

    36 வயதான செரீனா வில்லியம்ஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பெண் குழந்தை பெற்ற பிறகு கடந்த மார்ச் மாதம் மீண்டும் களம் திரும்பினார். அந்த மாதத்தில் நடந்த இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை நோகி ஒசாகாவிடம் தோல்வி கண்ட செரீனா வில்லியம்ஸ் அதன் பிறகு எந்த போட்டியிலும் விளையாடவில்லை.

    ஸ்பெயினில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் போட்டியில் இருந்து விலகிய செரீனா வில்லியம்ஸ், இத்தாலி ஓபன் போட்டியில் இருந்தும் விலகி இருப்பதால் அவர் வருகிற 27-ந் தேதி தொடங்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. #Italian Open #SerenaWilliams 
    ×